Wednesday, 20 August 2014

தமிழனுக்கு...

வந்தாரை வாழவைத்து வீழ்ச்சியுற்ற தமிழகத்தின்
     வசைபோக்க நீயின்று எழடா தமிழா!
அலை அலையாய் ஆழிப் பேரலையாய்
     தமிழ் மாந்தர் படைசேர் தமிழா!
துறைத்துறை யாய்நீ துடித் தெழுந்தும்
     நம்மொழி வளர்க்க வேண்டும் தமிழா!
செந்தமிழை செழுந்தமிழாய் நீ வடிப்பாய்
     பார்! வையத்தார் வியப்பார் தமிழா!

தமிழின் மேன்மையை அறியா புல்லரை
     நாடி, நாடிநரம் பறுப்பாய் தமிழா!
தமிழெனும் சூரியக் கதிரொளி கொண்டு
     வரியோர் வாழ்விற்கு ஒளிசெய் தமிழா!
பொதிகையாய் நீ இருப்பினும் எதிர்ப்போர்க்கு
     சுடும் எரிமலை நீயடா தமிழா!
வீருகொண் டெழுந்த வேங்கை கூட்டத்தை
     வெல்லும் ஆளுண்டோ இப்புவிமீது தமிழா!

விதையாய் விழுந்த மறவர் யாவரும்
     வேரூன்றி மனதில் முளைத்திட வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்; நம்பகை
     அஞ்சி பறந்தோட வேண்டும் தமிழா!
புரட்சி காண் தமிழா! புவியையே
     புரட்டிடும் புரட்சி காண் தமிழா!
வாழ்வது தமிழா? வீழ்வது தமிழா?
     விடை சொல்லடா புலிநிகர் தமிழா!

No comments:

Post a Comment