பொல்லாத
உலகமடா தம்பி – அதில்
போராட
வேண்டுமடா தம்பி
பொய்யெங்கும்
நிறைந்ததடா தம்பி – இங்கு
மெய்வாழ
வழியில்லை தம்பி
வாய்மையே
வெல்லும் தம்பி – இருந்தும்
வாய்ப்பேச்சை
நெறிசெய் தம்பி
ஒழுக்கத்தை
பேணடா தம்பி – அதை
வழக்கமென்
றாக்கடா தம்பி
மொழிகாக்க
வேண்டும் தம்பி – அதுவே
பண்பாட்டின்
அடையாளம் தம்பி
காதல்
செய்யடா தம்பி – அங்கு
தமிழர்
கலைவளர்ப்பாய் தம்பி
மானம்
போற்றடா தம்பி – எங்கும்
தமிழ்வீரம்
முரசறை தம்பி
புலிவீரம்
நினைவுகொள் தம்பி – அங்கே
தியாகச்
சுடரானார் தம்பி
அறம்நீ
மறவா தம்பி – எனினும்
வாழ்விற்கு
பொருள்சேர் தம்பி
புகழ்வாய்
நீயும் பொதுஉடைமை – எதிர்
அழியுமிங்கு
பலகொடுமை தம்பி
கசடற கற்பாய்
தம்பி – என்றும்
கள் உண்ணாதே
தம்பி
அறிவியல்
விரிவுசெய் தம்பி – அதனை
ஆய்ந்துசொல்
பிறர்க்கும் தம்பி
பெண்ணியம்
போற்றடா தம்பி – இனி
அவள் ஆளவேண்டும்
தம்பி
களம்நேர்
காணடா தம்பி – உன்
இலக்கு
வெற்றிதான் தம்பி
வீண்செயல்
விட்டொழி தம்பி – பின்
வீழ்ச்சி
உனக்கில்லை தம்பி
தம்பி!
தம்பி! கவலைமறந்தார் – இன்று
அறிஞரெல்லாம்
உன்னை நம்பி!
No comments:
Post a Comment