வாடிய
பயிரை கண்டபோது
வாடிய பெருமான் உண்டு!
வாட்டம்
மாற்றி பயிரைக்காத்தவர்
எவருளார் வையத்தில் இங்கு!
இயற்கைகோ
நம்மாழ்வார் ஒருவரே
செய்தார் அப்பெருந் தொண்டு!
இயம்பினார்;
இயற்கை வேளாண்மைக்கு
நல்கிடு
தமிழா நின்பங்கு!
வெந்தாடி
வேந்தரிணை போர்குணம்!
விவசாயத்திலும் வீசுமம்மா தமிழ்மணம்!
வெறுஞ்செயற்கை
தாங்காது அவர்சினம்!
இயற்கையோடு கலந்ததே அவர்மனம்!
சாணிக்கு
பொட்டிட்டார் நடுவே
அமுதகரைசலை அளித்தவர் அவரே!
மரபணு
மாற்று விதைகளை
எதிர்த்ததும் அக்கல்லணை சுவரே!
கரிகாலன்
கட்டியாண்ட மண்ணில்
கரிஎடுக்க எத்தர்கள் துணிகையிலே
எதிர்த்து
எமைகாத்த வாளே!
தொடர்வோம்யாம் நின்வழி அப்போரே!
இயற்கை
இயற்கை யென்றே
இயற்கையாய் இயற்கையொடு கலந்தீரோ?
மண்காக்க
வேண்டு மென்றே
மண்ணுக்கு உரமாக போனீரோ?
எந்தமிழ்
மண்ணும் தாங்குமா?
பார்! தமிழகம் ஏங்குதே!
காண்!
இன்று அழுகுதே!
காப்பதற்கு ஆள் இன்றி!
கேட்குது
தமிழ் உலகம்
ஈடுசெய்வார் யார்? என்று
வாழிய
நின்புகழ் உலகில்
தமிழ் போல் நின்று!
No comments:
Post a Comment