குறள்நெறி பரப்பும் அறச்செயலை
குறைவின்றி செய்து வரும்
மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவைக்கு
என் வாழ்த்தினை உரித்தாக்குகிறேன்.
வாழ்வாங்கு வாழ்க நின்செயலென
வாழ்த்த மனம் இருப்பினும்
வாழ்த்துமடல் மட்டுமில்லை இது!
பாவேந்தர் பாரதிதாசன் போற்றுதல்
நிகழ்வன்று
நிகழ்ந்த சிலபிழை கண்டு மனம்நொந்து
பாட்டெழுதி கடிந்துரைக்க வந்தேன்
நானின்று
நீங்கள் மனதில் கொள்வீரென்று.
சிறுவன் நீ! சீர்த்திருத்தம்
சொல்லுவதோ!
சான்றோர் யாம் அவ்வழியே ஒப்புவதோ!
என எண்ணம் கொண்டவர் அல்லர்
‘திருக்குறளை’ பின்பற்றும் மாந்தர்.
நேரம் காலம் மாறும் வண்ணம்
கூட்டம் நடப்பது காட்சிப் பிழை
அதில் தவறொன்றும் இலை!
வரவேற்பும் இனிதே!
தொடக்கமும் இனிதே!
கேட்டேன் நல்ல தமிழமுதே!
சிறுவர் சிறுமியர் பேசியபின்
சொல்லொணா மகிழ்ச்சி மனதினிலே!
முதலாய் வந்த சிறுவன் பேசினான்
அனைவரின் சிந்தையையும் தூண்டினான்
‘அணுவைத் துளைத்தேழ் கடலைப்
புகுட்டிக்
குறுகத் தறித்த குறள்’
என மேற்கோள் காட்டினான்.
அதை வள்ளுவர் சொன்னாரென சொல்லி
இறுதியில் பெரும் இடியினை தாக்கினான்.
கடைசியாய் வந்த சிறுமி பேசியவள்
சிறுபிழை செய்தால் பாட்டினிலே!
அண்ணாவின் தம்பி பாவேந்தரென
தவறாய் எழுதிவிட்டார்
அவள் ஏட்டினிலே!
சிறுபிழை எனினும்
சிறுவர் பிழை
எனினும்
பொறுப்பெல்லாம்
‘நாம்’ என்பேன்.
பொறுத்திருந்து
பயனில்லை
செந்தமிழ் வளர்ந்திட வேண்டாவா?
பாட்டுக்கு வேந்தனவன்! பாவேந்தன் பாரதிதாசன்!
சுயமரியாதை இயக்கத்தின் தலைமைக் கவிஞனவன்!
கவிஞனை கவிதையால்
கவின்மிகு அழகொடு
முத்துத்தமிழால் வாழ்த்திய
முத்துகுரு – கவிஞரென்பேன்
வாழ்த்துகிறேன்.
‘சிதம்பரனார்’ என்றால் வ.உ.சி. பிள்ளை
ஒருவரே என்று நினைத்திருந்தேன்
தமிழறிஞர் பலரை முறைப்படி கற்ற
இன்பக் களிப்பில் நானிருந்தேன்
கசடற கற்க தவறினன் நீயென
கண்களை திறந்தார் சா.தி.இராமலிங்கம்
விழிப்புற் றெழுந்தேன் நான்! அறியாததை
அறிந்துக் கொள்ள! ஆன்றோர் கூட்டத்தில்!
செவிக்கும் அமிழ்திட்ட தமிழ்த்தொண்டர்
அவர் வாழிய! வாழியவே!
குறை சொல்ல வந்தவன்
குறை ஒன்றும் கூறாமல்
பாராட்டும், சீராட்டும்
பாட்டெழுதி வந்தானோ!
ஐயம் வேண்டா!!
சிறப்புரை ஆற்றிய இசைக்கவிக்கோ,
இயற்கை மருத்துவர், காழிக்கம்பன்,
கவிஞர். மு. வெங்கடேசபாரதி
அவர்களின் உரைதனிலே குற்றமுண்டு.
வந்தவன் சிவனே ஆயினும்
குற்றம் குற்றமென வாதிட்ட
பரம்பரை அன்றோ!
குற்றம் கூற மனம்
அஞ்சுதல் உண்டோ!
மூவெந்தர் வளர்த்த
முத்தமிழுக்கு என்றும்
மூச்சினை அளிப்பேன்
என் வாழ்ந்தனன் அன்றோ!
மும்முறை மன்றத்தில் – அவன்
‘புரட்சி வேண்டா’ என
புதுக்கருத்தை கனைத்தீரே!
அதுதான் ‘சிறப்புரை சொல்லாமோ’!?
அவை அடக்கம் கருதியன்றோ
அம்ர்ந்திருந்தேன் இருக்கையில்!
ஆர்ப்பரித்த நெஞ்சத்தை
ஆழ்கடலென அமைதிசெய்தேன்!
சிங்கப் புலவனுக்குப் பின் வந்த
தங்கப் புலவன் – பாவேந்தன்
வாழத்தெரியாதவன் என பல்லோர் முன்
வாய்கூச்சம் ஏதுமின்றி நீருரைத்தீர்!
வெந்தாடி வேந்தனின் வழிவந்த பிள்ளை
‘கோடி இட்டழைத்தாலும் தொடேன்’
என்ற கொள்கையினை விட்டதில்லை
அவன் நெஞ்சுரம் போல் எங்கும்
இதுவரை யாங்கண்டதில்லை
உயிருடன் இருந்து பெருஞ்சித்திரன் கேட்டிருந்தால்
ஏடெடுத்து எரித்திருப்பான் உம்மை.
இருவிரல் நடுவே புகைச்சுருட்டு
நெடுங்காலம் இருந்தது பொய்யுமன்று!
புகையின் கெடுதலை நாளிதழில் கண்டு
விட்டார் வழக்கத்தை மறுனாளேயென்று!
அறியீரோ! வரலாற்றை நீரின்று!
வியந்தார் உடனிருந்த நண்பரன்று!
கேட்டார் நண்பர்கள் முன்னின்று!
உன்னால் எவ்வாறு முடிந்ததென்று!
உதிர்த்தார் கவிஞர் சொல்லொன்று!
எல்லாம் மனஉறுதி தானென்று!
பாவேந்தன் பேரன் கெட்டுப் போனதனால்
பாவேந்தனுக்கு ஒருபோதும் இழிவன்று!
பேச வேண்டுமென பேசிய பேச்சு
ஆனதே இச்சிறுவனுக்கு வீணென்று!
நல்லதொரு இசைகேட்டேன் உம்மிடத்தில்
குறைவின்றி பாரதியை புகழ்ந்துரைத்தீர்
பல்துறை அறிஞரென காட்டிவிட்டீர் – இருந்தும்
மறந்தீரே ‘பாவேந்தனின் பைந்தமிழை’!
வசைபாடும் கவிஞனுமில்லை!
வாழ்த்தநான் புலவனுமில்லை!
பொருளீட்ட ஏடெடுத்ததில்லை!
பாவேந்தன் வழிவந்த பிள்ளை!
எவருக்கும் என்மனம் அஞ்சியதில்லை!
இதுவரை எல்லை மிஞ்சியதில்லை!
இரவெல்லாம் என்கண் துஞ்சவில்லை!
இச்செயல் செய்தமைக்கு வருத்தமில்லை – இதை
ஏற்காவிடின் எனக்கொரு நட்டமுமில்லை.
வாழ்க தமிழ்!
வாழ்க குறள்!
வளர்க பாவேந்தர் பணி நன்றே!
(ஏப்ரல் 2013)
No comments:
Post a Comment