Wednesday, 2 October 2013

இளவரசனின் மரணம்...

விண்ணைத்தாண்டி போனாயோ!

இளவரசனின்
மரணம்!
நமக்கெல்லாம்
வெட்கம்!

சாதியெனும்
சதிவலையால்
சாகடித்தார்
சத்தியவானை! நவீன
சாவித்திரி தோற்றாளோ!

காதல் அஃது
உயிர் இயற்கை
உன் வாழ்விலும்
அதுவே உண்மை நிலை

பூத்தது காதல்
ரோசாவாய் அன்று;
நிற்பதோ உதிர்ந்து
வெறும் முள்ளாய் இன்று;

எதிர்பார்த்த எதிர்ப்பைவிட
பலவற்றை கண்டும்
அஞ்சாத பெரு நெஞ்சே!
மனம் தளர்ந்து விட்டாயோ!
வாழ்வினையே முடித்தாயோ!

அரசியல் சுயலாபங்கள்
அழித்ததோ உன்னை!
வெண்ணிலவை தேடி
அடைந்தாயோ விண்ணை!

யார் யாரோ
பலர் கூடி
கதறுகிறார்
உனக்காக!

உன்னவளின்
நிலையெனவோ?
சொல்வதற்கு
மொழியிலையே!

பதறுதடா தம்பி
என் நெஞ்சம்!
எவ்வாறு? தமிழர்
கண்கள் துஞ்சும்!
பலவகை எண்ணி
மனங்கள் அஞ்சும்!
ஒழியவில்லை சமூகத்தில்
சாதி நஞ்சும்!

எளிதாக உன் வாழ்வை
முடித்துக் கொண்டாய்!
எங்கள் பணிகளை
முடுக்கி வைத்தே!

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ நாம்
சிந்திக்கவே சொன்னான் பாரதி எங்கும்
சாக்கடை புத்தி மனிதர் தம்பி
சீர்திருத்திக்கொள் உனை நீ!

கொலையா? தற்கொலையா?
இதுவல்ல கேள்வி!
காதலுக்கு மரணம் தானா?
இச்சமூகத்தில் நீதி!

இனியேனும்,
சாதிகளை ஒழித்து
சமத்துவ உலகம்
செய்வோம்!

வாருங்கள் தோழர்களே!
இளந்தமிழ் வீரர்களே!
புதிய தலைமுறை

ஒன்றை படைப்பதற்கு!

No comments:

Post a Comment